இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (14-7-22) நடைபெற உள்ளது.
கடந்த போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் ஒரு மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த போட்டியில் விராட் கோலி விளையாடாததே பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியதால், இரண்டாவது போட்டியில் அவருக்கு இடம் கொடுப்பதே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். விராட் கோலிக்கு இடம் கிடைத்தால், ஸ்ரேயஸ் ஐயர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படுவார்.
இது தவிர இந்திய அணியின் ஆடும் லெவனில் வேறு மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியை போலவே பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரே இடம்பெறுவார்கள்.
ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சாளர்களாக பும்ராஹ், ஷமி, பிரசீத் கிருஷ்ணா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ராஹ், பிரசீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.