உமேஷ் யாதவிர்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தமாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அறிமுகமான உமேஷ் யாதவ், தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய 158 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ள உமேஷ் யாதவ், கடைசியாக ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடினார். அதற்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் உமேஷ் யாதவ் பங்கேற்று விளையாடவில்லை.
இந்திய அணியில் முகமது சிராஜ் சர்குல் தாக்கூர் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட துவங்கியதால் ஆடும் லெவனில் இவருக்கான வாய்ப்பு பறிபோய் விட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போதும், ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைக்காமல் போனது வருத்தமளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரத் அருண் தெரிவித்ததாவது,“உமேஷ் யாதவுடன் ஒன்றாக பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அவர் மிகவும் எளிமையானவர் அவர் ஒரே மாதிரியாக பந்து வீசக்கூடிய திறமை படைத்தவர், மிகவும் பலமான மற்றும் ஒழுக்கமான வீரர் ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் நல்ல காம்பினேஷன் அமைந்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. உமேஷ் யாதவ் எப்பொழுது இந்திய அணிக்கு விளையாடுகிறாரோ அப்பொழுதெல்லாம் தன்னுடைய திறமையின் மூலம் பந்தை ரிவேர்ஸ் செய்வார். என்னுடைய ஒரே விருப்பமெல்லாம் அவரை இன்னும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும், ஆனால் தற்பொழுது இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் உமேஷ் யாதவ் சாதனையை இன்னும் செய்யவில்லை. உமேஷ் யாதவிடம் நல்ல வேகம், பந்தை ஸ்விங் செய்யும் திறமையுடன் சேர்த்து பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடிய திறமையும் உள்ளது, அவருக்கு அதிக திறமை உள்ளது ஆனால் என்னுடைய பார்வையை பொருத்தவரையில் அவர் இன்னும் அதிகமாக விளையாடி இருக்க வேண்டும் என்று பரத் அருண் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.