இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய ஜோஃப்ரா ஒருநாள் தொடரில் பாதியிலிருந்து வெளியேறினார். அவருக்கு வலது கை முழங்கையில் பிரச்சினை இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது. இந்தியாவுக்கு தொடர் விளையாட வருவதற்கு முன்பாகவே இங்கிலாந்தில் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது கண்ணாடி கிழித்து அவருக்கு இந்த காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது.
அந்த காயத்துடனே விளையாடிய அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரியவந்தது. அதன் காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறினார் மேலும் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திலிருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் பிரச்சனை
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு தற்பொழுது மீண்டும் விளையாட தொடங்கியிருக்கிறார். இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் தொடர்களில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கெண்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 5 ஓவர் முதலில் வீசினார். அதில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதற்கு மேல் அவரால் இயல்பாக பந்து வீச முடியவில்லை மீண்டும் வலி காரணமாக அவதிப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவரைப் பரிசோதித்த மருத்துவர் குழு காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்றும் இன்னும் அவருக்கான ஓய்வு தேவை என்றும் விளக்கி கூறியது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் வெளியேறல்
இந்நிலையில் நன்கு ஓய்வு எடுக்க விரும்புவதால் நியூசிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட போவதில்லை என்று கூறியிருக்கிறார். காயம் குணமடைந்து உடனே மீண்டும் பழையபடி விளையாட இருப்பதாகவும் அது வரை வீட்டில் அதற்கு தகுந்த சிகிச்சையும் ஓய்வும் எடுக்கப் போவதாக ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் கமிட்டியிடம் கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் இரண்டாம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 14ஆம் தேதி முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னர் மூன்று நாட்கள் கழித்து நியூசிலாந்து அணி இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.