தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து அணியின் மொய்ன் அலி, சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டோல் மைதானத்தில் நேற்று (27-7-22) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பாரிஸ்டோ 90 ரன்களும், 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய மொய்ன் அலி 52 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு, ஸ்டப்ஸ் 72 ரன்களும், ஹென்ரிக்ஸ் 57 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே தென் ஆப்ரிக்கா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், டி.20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மொய்ன் அலி முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் யாரும் 16 பந்துகளுக்குள் அரைசதம் அடித்தது இல்லை.