லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து வெற்றி பெற 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று இன்னமும் 72 ஓவர்கள் மீதமுள்ளன. இது தவிர 2 நாட்கள் உள்ளன. ஒன்று இன்றோடு முடியவடைய வேண்டும், இல்லையெனில் நாளை முடியவடையும், 5ம் நாள் ஆட்டத்துக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் சற்று முன் வரை 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 19 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ரூட்., டென்லி ஆடிவருகின்றனர்.
இன்று 171/6 என்ற நிலையில் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்துக்குப் பதிலாக இறக்கப்பட்டுள்ள லபுஷேன் பழைய டெஸ்ட் போட்டி பாணியில் ஆடி 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு வலுசேர்த்தார். முதல் இன்னிங்சிலும் லபுஷேன் 74 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சை மேம்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்ச்சர், பிராட் தலா 2 விக்கெட்டுகளையும் வோக்ஸ், லீச் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். லபுஷேன் 80 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.
பீல்டிங்கில் கோட்டை விட்ட இங்கிலாந்து:
லபுஷேனுக்கு மட்டும் மூன்று கேட்ச்களை கோட்டை விட்டனர் இங்கிலாந்து பீல்டர்கள், அவர் 14 ரன்களில் இருந்த போது ஜோ ரூட்டும், 42-ல் ஜானி பேர்ஸ்டோவும், மீண்டும் இன்று 60 ரன்களில் லபுஷேன் இருந்த போது பிராட் பந்தில் பேர்ஸ்டோ இன்னொரு கேட்சையும் தவற விட்டார்.
இங்கிலாந்து தன் வாழ்நாளில் ஒருமுறை கூட 359 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி கண்டதில்லை, அதிகபட்சமாக அந்த அணி வெற்றிகரமாக விரட்டியது 332 ரன்களே என்பது குறிப்பிடத்தக்கது, ஆகவே பெரிய மலையை ஏற வேண்டிய நிலையில் இங்கிலாந்து உள்ளது.
இந்நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் எடுத்து தோல்விக்கு அச்சாரமிட்டுள்ளது இங்கிலாந்து.