இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயன் மோர்கனுக்கு தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தாமதமாகப் பந்துவீசியது. 50 ஓவர்களை வீச கிட்டத்தட்ட 4 மணி நேரங்களை எடுத்துக்கொண்டது. எனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளது.
கடந்த 12 மாதங்களில் இதுபோன்று 2-ஆவது முறையாக தாமதமாகப் பந்துவீசியதால் இயன் மோர்கனுக்கு அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாட தடை மற்றும் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுபோன்று அணியின் இதர வீரர்களுக்கு தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறவுள்ள 4-ஆவது போட்டியில் இயன் மோர்கன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி மாதம் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் இயன் மோர்கன் மீது தாமதமாகப் பந்துவீசிய விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.
ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரை சதமடித்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், டாம் குர்ரான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பாக ஆடினர்.
ஜேசன் ராய் 76 ன்ரனில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட், மொயின் அலி ஆகியோர் பொறுப்புடன் ஆட இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.வ்