நான்காவது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து.. ?
இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது.
தொடரை தக்க வைத்து கொள்ள இந்திய அணியும், தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளதால் இந்த முக்கியமான போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்காக நேற்று நடைபெற்ற வலை பயிற்சியில், கிறிஸ் வோக்ஸ் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் பயிற்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கிறிஸ் வோக்ஸ் நாளை துவங்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்த கிறிஸ் வோக்ஸ் ஒரு வேளை காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சாம் குர்ரான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.