பெண்களுக்கான முத்தரப்பு டி.20 தொடர்; கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா !!

பெண்களுக்கான முத்தரப்பு டி.20 தொடர்; கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள்  அணிக்கு எதிரான முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள்  அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலீசா ஹீலி, பெத் மூனி ஆகியோர் களமிறங்கினர். மூனி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஹீலியுடன், அஷ்லேக் கார்டனர் ஜோடி சேர்ந்தார். நிதனாமாக விளையாடிய கார்டனர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹீலியும் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து மெக் லேனிங் – எலிஸ் வில்லானி ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் குவித்தனர். இரு வீராங்கனைகளும் அரைசதம் கடந்தனர். கடைசி ஓவரில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லானி ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. லேனிங் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி பந்துவீச்சில் ஜென்னி கன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக டெனியலி வயட், பிரியோனி ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். ஸ்மித் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து டாமி பியூமோண்ட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வயட் உடன், நடாலி சீவெர் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வயட் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த சீவெர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய எமி எல்லன் ஜோன்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்தவர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் மேகன் ஸ்சூட் 3 விக்கெட்களும், டெலிசா கிம்மின்ஸ், அஷ்லேக் கார்டனர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Mohamed:

This website uses cookies.