ஜெயிச்சு என்ன பிரயோஜனம்..? கிடைத்த வாய்ப்பை வீணடித்த இங்கிலாந்து அணி; போராடி வீழ்ந்தது ஆஃப்கானிஸ்தான்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 32 ரன்களும், உஸ்மான் கானி 30 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கர்ரான் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து, 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன்பின் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, விரைவாக போட்டியை முடித்து ரன் ரேட்டை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு விளையாடாமல், மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஜாஸ் பட்லர் (18), அலெக்ஸ் ஹேல்ஸ் (19), டேவிட் மாலன் (18) மற்றும் லிவிங்ஸ்டன் (29*) ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.20 உலகக்கோப்பை தொடரில் வெற்றியின் மூலம் கிடைக்கும் புள்ளிகளுக்கு நிகராக ரன் ரேட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் 4.5 ரன் ரேட் பெற்று அசைக்க முடியாத இடத்தில் நியூசிலாந்து அணி இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியோ தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கும். இங்கிலாந்து அணியின் இந்த மந்தமான ஆட்டம் கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு பாதகமாகவும் அமையலாம்.