இங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.
சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.
இருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களும், இந்திய அணி 272 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல் 149 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 114 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகினர். வெற்றிக்காக நடத்திய அவர்களின் பேட்டிங் போராட்டம் இந்திய ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. இருப்பினும் இந்தியா தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் தோல்வியடைந்து இந்தியா தொடரை இழக்கும் நிகழ்வு 6 வருடங்களுக்குப் பிறகு அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் 4-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதை நாங்கள் தவறவிட்டோம். ஏற்கனவே கோப்பை உறுதி என்பதால் இங்கிலாந்து அணி எவ்வித அச்சமும் இன்றி விளையாடிது.
அதுவே அவர்கள் எங்களை வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தொடரில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளோம். வெற்றிக்காக போராடிய இளம் வீரர்களான பந்த் மற்றும் ராகுல் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் விடைபெற்றுள்ளார். அவரை பற்றி நான் ஒரே வரியில் கூறுகிறேன் ‘அவர் சிறப்பான கிரிக்கெட் வீரரான திகழ்ந்துள்ளார்’. அவரது எதிர்காலம் பிரகாசிக்க எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.