இரு அணிகளும் வெற்றிக்காக வெறித்தனமான போராட்டம்… முக்கியமான போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்றது இங்கிலாந்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 73 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டீவன் கான்வே (3) மற்றும் பின் ஆலன் (16) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேன் வில்லியம்சன் 40 ரன்களும், நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததாலும், கடைசி 5 ஓவரில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.