2வது டெஸ்ட்: மழை வந்ததால் தப்பித்த பாகிஸ்தான்; பந்தாடிய இங்கிலாந்து!

மழை வந்ததால் தப்பித்த பாகிஸ்தான்; பந்தாடிய இங்கிலாந்து!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சில் மிகவும் தடுமாறி வருகிறது. மழை குறுக்கிட்டதால் ஆல் அவுட் ஆகாமல் தப்பித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலைக்கு சென்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

13ஆம் தேதி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அந்த அணிக்கு மிகவும் மோசமான துவக்கமே அமர்ந்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்த மசூத், இந்த இன்னிங்சில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபித் அலி மற்றும் ஆசாத் அலி இருவரும் சிறிது நேரம் நிலைத்து ஆடினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. அசாத் அலி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அரைசதம் அடித்த அபித் அலி 60 ரன்கள் எடுத்திருக்கையில், சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாற்றம் கண்டது.

பாக்., அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் களத்தில் சிறிது நேரம் நிலைத்து ஆடி 25 ரன்கள் எடுத்திருந்தார். நடுவே மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது. இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது.

இந்திய நேரப்படி இரவு 11 மணி வரை மழை நிற்கும் என பார்த்துக் கொண்டிருந்த நடுவர்கள் மழை நிற்காத காரணத்தினால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அறிவித்தனர்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Prabhu Soundar:

This website uses cookies.