ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்!!

ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் ஒரே இன்னிங்சில் 17 சிக்சர் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரின் இருபத்தி நான்காவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் மோதின இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதிரடி வீரர் ஜேசன் ராய் காயம் ஏற்பட்டதால் வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக வின்ஸ் துவக்க வீரராக களமிறங்கினார். வின்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ உடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ 90 ரன்கள் இருக்கையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு, அணியின் கேப்டன் இயான் மார்கன் களமிறங்கினார். களம் கண்ட மறு கணத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்துப் புறங்களிலும் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய இவர் 57 பந்துகளில் சதம் அடித்து உலக கோப்பை போட்டிகளில் அதிவிரைவாக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் இது உலக கோப்பை தொடரில் நான்காவது அதிவிரைவான சதம் ஆகும். சதம் கண்ட பிறகும் இவரது வேகம் சற்றும் குறையாமல் சிக்ஸர் மழையாக மைதானங்களில் பொழிந்தது. துரதிஷ்டவசமாக 71 பந்துகளில் 148 ரன்கள் அடித்து மார்கன் ஆட்டமிழந்தார் அதில் நான்கு பவுண்டரிகளும் 17 சிக்சர்களும் அடங்கும்.

இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் ஒரு இன்னிங்சில் 16 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் 17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.