தமிழகத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு ரஞ்சி கோப்பை அணி ! ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கூட அந்த அணியில் இடமில்லை !
புதுச்சேரி மாநிலத்திற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அதற்கென தனி ஒரு கிரிக்கெட் வாரியமும் அல்லது கிரிக்கெட் நிர்வாகமோ இல்லை. லோதா கமிட்டியின் படி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ தலைமையில் உருவாக்கப்பட்டு, தற்போது உள்ளூர்களில் பல முக்கியமான தொடரில் விளையாடி வருகிறது. இதற்காக கிரிக்கெட் கட்டமைப்பை மிகச்சிறந்த வகையில் தங்கள் மாநிலத்தில் உருவாக்கியுள்ளது புதுச்சேரி கிரிக்கெட் வாரியம்.
மேலும் புதுச்சேரியில் மட்டும் மின்சார கோபுர விளக்குகளுடன் மொத்தம் ஆறு மைதானங்கள் இருக்கின்றன. இதனை வைத்து சர்வதேச போட்டிகளை தாங்கள் நடத்த விரும்புவதாக புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறது.
இந்நாளில் இப்படி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அணியில் தமிழக வீரர் மற்றும் பயிற்சியாளர் ஒருவர் கூட இந்த அணியில் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது தங்கராசு நடராஜன் எனும் தமிழ் மகனின் பெயரை உலக தமிழர்கள் பெருமிதத்தோடு விசாரித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அந்த ஒற்றை தமிழரின் சாதனைகளை பலரும் பேசி வருகின்றனர். தற்போது புதுச்சேரி என்ற சொந்த மாநிலத்தில் கிரிக்கெட் அணியை புதுச்சேரியில் உள்ள நடராஜனை போன்ற வீரர்களுக்காக போராட வேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம்.
இராஜஸ்தானத்தைச் சேர்ந்த பங்கஜ் சிங், மும்பையைச் சேர்ந்த ஷஷாங்க் சிங், பரிக்ஷித் வல்சங்கர், சாகர் பரேஷ் உதேசி, சாகர் திரிவேதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பரோஸ் டோக்ரா, கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் மோகன் நாயர், ஃபேபிட் அகமது, வி.எஸ். அப்துல் சபர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆஷிஸ்ட் ராஜீவ் சங்கனக்கல் – இவர்களெல்லாம் யாரென்று பார்க்கிறீர்களா? புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள மட்டைப்பந்து வீரர்களாம் இவர்கள்.
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியும், காரைக்காலிலும் தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் வரலாற்றுத் தாயகங்கள். கேரளாவிலிருக்கும் மாகே, ஆந்திரத்திலிருக்கும் யானம் ஆகிய பகுதிகள், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டங்களாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட, மக்கள் தொகையில் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் 94 விழுக்காட்டில் உள்ளனர். ஆனால், புதுச்சேரி கிரிக்கெட் அணியிலோ முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று தமிழ் தேசிய பேரியக்கம் உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி அம்பலப்படுத்தி இருக்கிறது.