“கொஞ்சமாவது கிரிக்கெட் அறிவுள்ளவங்க தலைமை பொறுப்புல இருந்திருந்தா…” – பிசிசிஐ மீது சாகித் அப்ரிடி சாடல்!

பிசிசிஐ அதிகாரத்தில் கிரிக்கெட் அனுபவம் உள்ளவர்கள் இருந்திருந்தால் இப்படி தரைக்குறைவான முடிவுகள் வந்திருக்காது ஜேய் ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சாகித் அப்ரிடி.

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைத் தொடர் திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை. அதே போல் பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வருவதில்லை.

இரு அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. அதுவும் பொது மைதானங்களில் நடத்தப்படும் போட்டியாக இருந்தால் மட்டுமே. இப்படியிருக்க, அடுத்த வருடம் ஆசிய கோப்பையில் இந்திய அணி எவ்வாறு பங்கேற்கும்? பொது மைதானத்தில் போட்டி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? என்கிற பல்வேறு கேள்விகள் இப்போது இருந்து எழுந்தன.

இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜேய் ஷா கொடுத்த பேட்டியில், “இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்காது. பொது மைதானத்தில் நடத்தப்பட்டால் மட்டுமே பங்கேற்கும்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இவர் ஆசிய கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராகவும் இருக்கிறார் என்பதால் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஷ் ராஜா கூறுகையில்,

“ஆசிய கிரிக்கெட் அசோசியேஷனிலிருந்து வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக இந்த அசோசியேஷன் இருப்பதாகவும் தெரியவில்லை. அதில் நாங்கள் ஒரு அங்கமாக இருப்பதால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை.”

மேலும், “2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் நாங்கள் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது இந்தியா நடந்துகொள்வது பொறுத்து இருக்கிறது.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

“கிரிக்கெட்டில் இரண்டு எதிர் துருவங்கள் கொண்ட அணிகள் கடந்த 12 மாதங்களாக நான்கு போட்டிகள் விளையாடியதை வைத்து பார்க்கையில், இரு நாடுகளின் ரசிகர்கள் மத்தியில் நல்ல மனநிலை நிலவி வருகிறது. சமூக வலைதளங்களில் அவர்களுக்கிடையே இருக்கும் நட்புணர்வையும் பார்க்க முடிகிறது. பிசிசிஐ செயலாளர், குறிப்பாக உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இப்படி சர்ச்சையாக பேசுவதற்கு என்ன காரணம்? பிசிசிஐ தலைமையில் போதிய கிரிக்கெட் அறிவுள்ளவர்கள் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.