போட்டியே நடக்கல.. ஆனாலும் இந்தியாவின் முதலிடம் காலியானது இப்படித்தான்! இந்திய ரசிகர்களுக்கு ஐசிசி அளித்த அதிர்ச்சி
டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் நீண்டகால முதலிடம் காலியானது இந்த விதிமுறையால் தான் என விளக்கமளித்துள்ளது ஐசிசி தரப்பு.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நிர்வாகம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட்டிருக்கிறது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணி 2 இடங்கள் கீழே இறங்கி 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.
கடும் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 105 மற்றும் 91 ஆகியவற்றில் முறையே இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.
இந்தியா பின்னடைவு.. ஐசிசி விளக்கம்!
உலகையே தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐபிஎல் உட்பட திட்டமிட்டிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், போட்டியே நடக்காத போதிலும் ஐசிசி அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்திய அணி 4 ஆண்டுகளில் முதன்முறையாக தரவரிசை பட்டியலில் பின்னடைவை சந்தித்தது. இதற்க்கு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
எதனடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது என ஐசிசி விளக்கமளித்து. அதில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள தரவரிசையில் 2016/17 ஆண்டு ஆடிய டெஸ்ட் போட்டிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. 2017 மே மாதம் முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவீதம் மதிப்பெண்களும், 2019 மே மாதத்திற்கு பிறகு இந்த ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 100 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, இந்திய அணி 2016/17 காலகட்டத்தில் 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றிருந்தது. ஆனால் இவை கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, 2017க்கு பிறகு தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா தோல்வியை சந்தித்தது. இவை கணக்கில் கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக, புள்ளிகள் குறைந்து இந்திய அணி 114 புள்ளிகளுடன் தரவரிசையில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.