‘‘இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சன் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலானது,’’ என, இந்தியாவின் ரகானே தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரகானே 31. இதுவரை 65 டெஸ்டில் (4203 ரன்கள்) விளையாடி உள்ள இவர், 2014ல் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதமடித்து (103) வெற்றிக்கு வித்திட்டார்.
தற்போது ஊரடங்கால் வீட்டில் உள்ள இவர், இதுவரை சந்தித்த பவுலர்கள் குறித்து ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியது:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு பவுலரும் சவாலானவர்கள். இருப்பினும் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்துவீச்சை சந்திப்பது சிரமம். ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார். பேட்ஸ்மேனுக்கு ஏற்ப துல்லிமாக பந்துவீசி விக்கெட் வீழ்த்துகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கல்வி, விளையாட்டு, வேலை உட்பட அனைத்தும் முடங்கி உள்ளன. இந்த நேரத்தில் மனவலிமையுடன் இருக்க வேண்டியது அவசியம். இது, விளையாட்டு நட்சத்திரங்களுக்கு கட்டாயம் தேவை. தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை ஆறரை வயதான எனது மகளுடன் செலவிடுகிறேன்.
இக்கட்டான நேரத்தில் மகளுடன் இருப்பது அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், டிராவிட், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் எனது ‘ரோல் மாடல்’கள். கடந்த 2015ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் போது பெடரரை சந்தித்தது மறக்க முடியாத தருணம்.
இவ்வாறு ரகானே கூறினார்.
டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ரஹானே, இந்திய மண்ணில் அடித்த சதத்தை தவிர, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். மேலும் தான் ஒரு பிளாக் பெல்ட் ஹோல்டர் என்பதையும் ரஹானே தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நிலையிலும் ரஹானே, நல்ல விஷயத்தையே பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் மக்கள் அதிகளவில் உயிரிழப்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். ஆனால் இதில் உள்ள நல்ல விஷயத்தை பார்க்கிறேன். நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறேன். குறிப்பாக ஆறு மாத குழந்தையான என் மகளுடன் நேரம் செலவிடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்றார்