இங்கிலாந்து மண்ணில் இவரது பந்துவீச்சை தொட கூட முடியாது; ரஹானே ஓபன் டாக்
ஸ்விங் பந்துக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சவாலானது என ரகானே தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. இவர் இந்திய மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். வேகப்பந்து வீச்சுக்களை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் சேர்க்கக் கூடியவர்.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எதிர்கொள்வது மிகவும் சவாலானது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை பற்றி பேச வேண்டுமென்றால் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகவும் சவாலான பந்து வீச்சாளர். அங்குள்ள சூழ்நிலையை நன்றாக அறிந்தவர்.
தற்போது நடைபெற்று வரும் சம்பவம் (கொரோனா வைரஸ்) மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஆனால், நேர்மறையான பக்கத்தை பார்த்தோம் என்றால், குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவிட முடிகிறது. தற்போது என்னுடைய மகளுக்கு ஆறரை மாதம்தான் ஆகிறது. அவளுடைய வீட்டிலேயே இருப்பது அதிர்ஷ்டம்’’ என்றார்.