காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகுகிறார் டூபிளசிஸ்
இலங்கையில் நடந்த போட்டியின் போது வலது தோள்பட்டையில் காயம் அடைந்ததால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டுபிளிசிஸ் காயம் அடைந்தார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கை அணியிடம் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதையடுத்து இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி அங்கு விளையாடுகிறது.
கண்டியில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் போட்டியின் போது, இலங்கை வீரர் அடித்த பந்தை டுபிளிசிஸ் தாவி பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மருத்துவர் பரிசோதித்தார். காயம் குணமாக ஆறு வார காலம் தேவைப்படும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் காயம் காரணமாக டுபிளிசிஸ் வலது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்திருந்தார். இப்போது அந்த இடத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், டி காக் கேப்டன் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிகிறது.