உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தை தொடர இயலவில்லை.
அரை இறுதி சுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி எஞ்சிய 23 பந்துகளை அடுத்த நாள் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது.
இதன்பின்னர் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 24 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போராடிய ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விக்கெட் கீப்பர் டோனியும், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து ரன்களை குவிக்க போராடினர். எனினும் டோனி ரன் அவுட் ஆனார். இந்த போட்டியை கொல்கத்தாவை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி (வயது 33) என்பவர் தமது செல்போனில் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, டோனி ரன் அவுட் ஆனதும் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஓய்வு முடிவு குறித்த தோனியின் வார்த்தைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கும் என்று வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. முன்னாள் கேப்டனான அவர் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது.
’இந்திய கிரிக்கெட் அணிக்கு அவரது பங்களிப்பு அதிகம். அதனால் ஓய்வு முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்’ என்று சிலரும் ’அவர் இன்னும் சிறப்பாகவே ஆடி வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை’ என சிலரும் கூறி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இப்போது தோனிக்கும் வந்திருக்கிறது.