காற்று மாசு என எடுத்துக்கூறி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுத்தோம். அதற்கு கண்டுகொள்ளாமல் தற்போது வந்து நன்றி மட்டும் கூறுகிறீர்களே! என கங்குலியின் ட்வீட்க்கு ட்விட்டரில் கடுப்பான ரசிகர்கள்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிக்கு முன்பாக டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் வீரர்கள் பயிற்சி மேல் மேற்கொள்வதற்கும் ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்ததோடு போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற பிசிசிஐக்கு கடிதம் அனுப்பினார்.
இதை கவனித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, போட்டி திட்டமிட்டபடி டெல்லி மைதானத்தில் நடைபெறும். அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது என பதிலளித்தார். இது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது.
போட்டிக்கு முன்பு பயிற்சியின்போது வங்கதேச வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால் வீரர்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பிசிசிஐ தரப்பு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ட்விட்டரில் கங்குலி போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கங்குலியின் ட்வீட்: “கருத்தில் கொள்ளாமல் மைதானத்தில் களமிறங்கி ஆடிய 2 அணிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான காற்று மாசு இருந்தாலும், டி20 ஆட்டத்தில் ஆடிய வீரா்களுக்கு நன்றி. சிறப்பாக ஆடிய வங்கதேச அணிக்கு வாழ்த்துகள் என்றாா் கங்குலி.” போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றக்கூறி எடுத்துச்சொல்லியும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது எதற்கு நன்றி என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.