25 வயது இளைஞனை போல உணர்கிறேன் : கிறிஸ் கெயில்

மொகாலியில் நடந்த ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி தனியாக போராடினார்.

பதினோறாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இப்போது நடந்து வருகிறது. இதன் 12-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே  கேப்டன் தோனி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். பஞ்சாப் அணியில் கடந்தப் போட்டிகளில் களமிறங்காத கிறிஸ் கெய்ல் இந்தப் போட்டியில் இறங்கினார். அவரும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரருமான கே.எல்.ராகுலும் அடித்து ஆடினர்.

இருவரையும் பிரிக்க முயன்றும் முடியவில்லை. 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராகுல். அடுத்து கெயிலுடன் இணைந்த மயங்க் அகர்வாலும் வந்த பந்துகளை எல்லாம் விளாசினார். கிறிஸ் கெய்லைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் 33 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்திருந்த போது, வாட்சன் பந்தை லெக்சைடில் தூக்கி அடித்தார். அந்தப் பந்து இம்ரான் தாஹிரின் கையில் தஞ்சமடைந்தது. அவர் வெளியேற யுவராஜ்சிங் வந்தார். மயங்க் அகர்வால் 19 பந்தில் 30 ரன் எடுத்திருந்தபோது இம்ரான் தாஹிர் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஆரோன் பின்ச் இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகி ஆச்சரியம் கொடுத்தார். அவர் விக்கெட்டையும் இம்ரான் தாஹிர் தூக்கினார்.

யுவராஜ் சிங், 13 பந்துகளில் 20 ரன்களும் கருண் நாயர் 17 பந்துகளில் 29 ரன்களும், கேப்டன் அஷ்வின் 11 பந்துகளில் 14 ரன்களும் எடுக்க அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் 240 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவர்களில் பஞ்சாப் வீரர்களின் ரன்வேகத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் குறைத்தார்கள்.


சிஎஸ்கே தரப்பில் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டையும் ஹர்பஜன் சிங், வாட்சன், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது பஞ்சாப். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் 11 ரன்னிலும் காயத்துக்குப் பிறகு களமிறங்கிய முரளிவிஜய், 12 ரன்னிலும் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினர். அடுத்து வந்த ராயுடு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். கடந்த போட்டியில் அசத்திய சாம் பில்லிங்ஸ், அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 9 ரன்னில் வெளியேற, ரசிகர்களுக்கு டென்ஷன்.

பின்னர் வந்த கேப்டன் தோனி, பொறுமையாக ஆடினார். அதே நேரம் நல்ல பந்துகளை விளாசவும் செய்தார். இந்த நேரத்தில் ராயுடு ரன் அவுட் ஆக, சிஎஸ்கேவின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்து வந்த ஜடேஜா, ரன் எடுக்கத் தடுமாற, தேவை யான ரன் ரேட்டும் ரசிகர்களின் டென்ஷனும் ஏறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் ஒத்தையில போராடினார் தோனி.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மொகித் ஷர்மா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட பிராவோ ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து வைடானது. அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். இப்போது இரண்டு அணியிலும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. ஆனால், முகத்தில் எந்த சலனத்தையும் காண்பிக்காத தோனி, அடுத்தடுத்து சிக்சர் அடிப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர் ரசிகர்கள். ஆனால், மொகித் சர்மா, பந்தை வைட் யார்க்கராக வீசி கடுப்பேற்றினார் தோனியை.

அடுத்தப்பந்தை தோனியால் அடிக்க முடியாமல் போனது. இதற்கடுத்தப் பந்து பவுண்டரிக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில் எல்லைக் கோட்டை டச் பண்ணவில்லை. இதில் ஓடி ரன் சேர்க்கவில்லை தோனி. இதனால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. ஆறுதலாக, கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கினார் தோனி.  வெறும் 4 ரன்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. தோனி அவுட் ஆகாமல் 44 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். ஐபிஎல் போட்டியில் தோனியின் அதிகப்பட்ச ரன் இது. மூன்றாவது லீக்கில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வி.
பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டும் அஷ்வின், மொகித் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.

Editor:

This website uses cookies.