ஜப்பான் கால்பந்து வீரர்களின் செயலை கண்டு நெகிழ்ந்து போன யுவராஜ் சிங் !!

ஜப்பான் கால்பந்து வீரர்களின் செயலை கண்டு நெகிழ்ந்து போன யுவராஜ் சிங்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் ரசித்த ரசிகர்களும் கதறி அழுதார்கள்.

அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும் மைதான கேலரியை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த செய்கையை பாராட்டியுள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், “இந்த தூய்மை நடவடிக்கையை ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஒவ்வொரு வீரரும், அணியினரும் உலகில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என ட்வீட்டியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.