அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். அவருடன் தொடர்பில் இருந்த இரண்டு வீரர்கள் உட்பட 3 பேர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வருகிற நவம்பர் 27ம் தேதி துவங்குகிறது. இதற்காக வீரர்கள் மற்றும் உடன் செல்லும் அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் முன்னணி வீரர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த இவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் துவங்க இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் அதற்குள் இவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவர். இல்லையேல் இவர்கள் இன்னும் சில காலம் தனிமைப்படுத்தப்பட்டு இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வீரருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது அவருடன் தொடர்பில் இருந்த இருவரும் என மொத்தம் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அந்த முறையிலேயே அவர்கள் தனிமையில் இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான மாற்று வீரர்களை நாங்கள் அறிவிக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் மாற்று வீரர்கள் 2 பேர் அறிவிக்கப்படுவர். இவர்களுக்கு குணமடைந்து விட்டால் இவர்களே மீண்டும் அணியில் இடம் பெறலாம். இல்லையேல் தற்காலிகமாக மாற்று வீரர்களை வைத்து வரும் தொடரில் விளையாடுவோம்.” என தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தது.
இந்த தொடரில் பங்கேற்க ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் தென் ஆப்பிரிக்கா வந்தடைந்து தங்களது பரிசோதனைகளையும் முடித்த பிறகு தனித்தனியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.