பயிற்சியை துவங்கிய முன்னாள் கேப்டன்; பார்த்தவுடன் ரசிகர்கள் குஷி!

பயிற்சியை துவங்கிய முன்னாள் கேப்டன்; பார்த்தவுடன் ரசிகர்கள் குஷி!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்தில் வைரஸ் தாக்கம் குறைந்ததால், மீண்டும் பயிற்சியை துவங்கிய வீரர்கள் வருகிற ஜூலை 8ஆம் தேதி விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உச்சத்தை அடைந்து வருவதால் இன்னும் ஒருமாத காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஆகஸ்ட் மாதம் வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் பங்கேற்கிறது. அடுத்தடுத்து ஆஸி., அணிக்கு தொடர்கள் வருவதால், ஆஸி., வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் பிரபல ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இத்தகவலைச் சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். இது நல்ல செய்தி. பேட்டை எப்படிப் பிடிப்பது என்பதை மறக்கவில்லை என்று கூறியுள்ளார்.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது.

அக்டோபர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெறுகிறது. நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியும், ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரும் நடைபெறுகிறது.

இந்த அட்டவணையில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழலில் இது சாத்தியமில்லை என தெரிகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.