விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாநில அணிகளுக்கு இடையிலான 50 ஒவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – குஜாராத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவுசிக் காந்தி, முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபரஜித் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு கவுசிக் காந்தி உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். காந்தி 120 பந்தில் 127 ரன்கள் எடுத்தும், விஜய் சங்கர் 102 பந்தில் சரியான 100 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இவர்களது ஆட்டத்தால் தமிழ்நாடு 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. தமிழ்நாடு அணியின் திறமையான பந்து வீச்சால் குஜராத் அணி 45.1 ஓவரில் 235 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மெராய் மட்டும் 101 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் தமிழ்நாடு 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு அணி சார்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டும், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிராவும், உத்தர பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லியும், சர்வீசஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பையும், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர பிரதேசமும், சண்டிகாருக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிராவும் வெற்றி பெற்றது.