2020ஆம் ஆண்டு யு-19 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் ஒருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிசிசிஐ தமிழகத்தை புறக்கணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு பிரியம் கர்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்திய 17 வயது யாஷவி ஜைஸ்வால்-க்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
13-வது யு-19 உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாக நடக்கவிருக்கும் இந்த தொடரில் இந்திய அணி, குரூப் ஏ-வில் ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் முதல் இரு இடங்கள் பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய கிரிக்கெட்டில் பலம் பொருந்திய அணியாக உள்ளது தமிழகம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி ஆகிய இரண்டிலும் இறுதி போட்டி வரை சென்றது.
இருப்பினும், உலகக் கோப்பை யு-19 இந்திய அணியில் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியிலும் ஒரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை.
தமிழகத்தை ஒட்டுமொத்தமாக பிசிசிஐ புறக்கணிக்கிறதா? என விமர்சகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
யு-19 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:
பிரியம் கர்க் (கேப்டன்), துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன்), யாஷ்வி ஜைஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்ஷேனா, ஷஷ்வத் ராவத் (பரோடா), திவ்யான்ஷ் ஜோஷி, ஷுபாங் ஹெக்டே , ரவி பிஷ்னாய், ஆகாஷ் சிங், கார்த்தி தியாகி), அதர்வா அன்கோல்கர், குமார் குஷாக்ரா, ஷுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பாட்டீல்.
இதற்கு முன்பாக 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா யு-19 உலக சாம்பியன் ஆகியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.