தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை சூரத்தில் தொடங்கியது. இந்திய அணியில் 15 வயது சிறுமி ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களையே எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் அதிகபட்சமாக 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். ஸ்மிருதி 21, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19, ரன்களை எடுத்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் 3-26, நடைன் டி கிளார்க் 2-10 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா திணறல்: 131 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. லிஸ்லே லீ 16, டஸ்மின் பிரிட்ஸ் 3 ரன்களுக்கும், நடைன் டி கிளார்க் டக் அவுட்டானார்கள். அதன் பின் லாரா வொல்வார்ட், மிக்னான் பிரீஸ் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். லாராவை 14 ரன்களுடன் வெளியேற்றினார் பூனம் யாதவ். அவருக்கு பின் ஆட வந்த இளம் வீராங்கனை சுனே லுஸ்ஸூம், பூனம் பந்தில் கோல்டன் டக்கானார். 9 ஆவது ஓவர் முடிவில் 48/5ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.
பின்னர் நொன்டுமிúஸாவை 4 ரன்களுக்கு போல்டாக்கினார் ஹர்மன்ப்ரீத் கெளர். ஷப்னிம் இஸ்மாயில் 6, அபோங்கா 5 ரன்களுடன் வெளியறினர். அப்போது 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.
மிக்னான் அபாரம் 59: மறுமுனையில் தனியாக போராடி சிறப்பாக ஆடிய மிக்னான் பிரீஸ் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து வெளியேறினார். கடைசி விக்கெட்டாக நோன்குலுலெகோ டக் அவுட்டான நிலையில், இறுதியில் 19.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.
தீப்தி சர்மா அபாரம்: இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 3-8, ஷிகா பாண்டே 2-18, பூனம் யாதவ் 2-25, ராதா யாதவ் 2-29 விக்கெட்டுகளை சாய்த்தனர்.