மேன்கட் முறைப்படி அவுட் ஆன இங்கிலாந்து வீராங்கனை மற்றும் இதற்கு முன்னர் ஐபில் தொடரின்போது ஜோஸ் பட்லர் என்று இரண்டு சம்பவத்தையும் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்திருக்கிறார் சேவாக்.
இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடந்த ஒரு நாள் போட்டிக்கான தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இந்து அணி வென்றது. ஆகையால் தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்கள் குவித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, 44வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அப்போது பந்துவீச்சு முனையில் நின்று கொண்டிருந்த சார்லட் டீன், பந்துவீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியேறியதால், மேன்கட் முறைப்படி தீப்தி ஷர்மா ரன் அவுட் செய்தார். மூன்றாம் நடுவரிடம் சென்ற இந்த முடிவு அவுட் என்று கொடுக்கப்பட்டது.
இதனால் ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ரசிகர்கள் பலர், இது ‘முறையற்ற வெற்றி’ ‘கிரிக்கெட் ஆட்டத்தின் ஒழுங்கு முறையை கெடுத்து வருகிறது’ ‘விதிமுறைகளில் இருந்தாலும் வீரர்களுக்கு மத்தியில் ஒழுக்கம் தேவை’ என தெரிவித்தனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், “ஐசிசி விதிமுறையில் இருக்கிறது. ஆகையால் நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டு விளையாட்டினோம். விதிமுறைகளை மீறினால் அதை கண்காணிப்பதற்கு நடுவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் இது மிகச் சரியான வெற்றி. அதை நடுவரும் எங்களுக்கு தெரிவித்துவிட்டார்.” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை வைத்து ட்விட்டர் பக்கத்தில் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறார் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “கிரிக்கெட்டை உருவாக்க தெரிந்த உங்களுக்கு விதிமுறைகள் தெரியவில்லை.” என ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் அவர் கிண்டல் அடித்தார். மேலும் ஐசிசி விதிமுறை 41.16.1 என்பதை குறிப்பிட்டு, இதை படிக்கும்படி அறிவுறுத்தியது வேறலெவலில் வைரலாகி உள்ளது.