சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது லக்னா சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகள், பேட்டிங்கில் 34 ரன்கள் என ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ருனால் பாண்டியா லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த வருட ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம்.
துவக்க வீரர் மயங்க் அகர்வால் 8 ரன்களுக்கு அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து உள்ளே வந்த கேப்டன் மார்க்ரம், வந்த முதல் பந்தில் வெளியேறினார். மூவரின் விக்கெட்டையும் க்ருனால் பாண்டியா எடுத்து அசத்தினார்.
ஹாரி புரூக்(3) ரவி பிஸ்னாய் அவுட்டாகி வெளியேற ஹைதராபாத் அணி தடுமாறியது. ராகுல் திரிப்பாதி நன்றாக விளையாடி வந்தபோது, 35 ரன்களில் அவுட்டாகி வெளியேற அணியின் ஸ்கொர் மோசமான நிலையில் இருந்தது.
கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (16) மற்றும் அப்துல் சமாத்(21*) இருவரும் சற்று நம்பிக்கை கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்தது. க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகள், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு, துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 13 ரன்களில் அவுட்டானார். தீபக் ஹூடா 7 ரன்னில் வெளியேறினார். 6 ஓவர்களில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தபோது, க்ருனால் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்ந்து, இலக்கை எளிதாக நெருங்க உதவியது. நன்றாக ஆடிவந்த க்ருனால் பாண்டியா 23 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட்டானார்.
க்ருனால் பாண்டியா அவுட்டானபோது, லக்னோ அணியின் வெற்றிக்கு 8 ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. லக்னோ அணி 114 ரன்கள் இருந்தபோது, 15ஆவது ஓவரை அடில் ரஷித் வீசினார். இதில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார். கேஎல் ராகுல் 35 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இருப்பினும் சன்ரைசர்ஸ் அணிக்கு இது தாமதமான கம்பேக் ஆகும். 16ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது லக்னோ அணி. இறுதியாக ஹைதராபாத் அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ.