கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், முதலில் பவுலிங் செய்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்களை கீழே காண்போம்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்துள்ளார்.
கடந்த முறை இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் முடிந்தது. ரிங்கு சிங் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார். மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
அந்த போட்டிக்கு பிறகு வரிசையாக நான்கு தோல்விகளை சந்தித்த கொல்கத்தா அணி, கடைசியாக நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு இப்போட்டியில் கொல்கத்தா அணி விளையாடுவதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 2 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்த போட்டிக்கு வந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் வலுவாகவும் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பையும் உண்டு.
குஜராத் அணியை பொறுத்தவரை, இன்றைய போட்டியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை, இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் முதுகு பகுதியில் வலி காரணமாக இன்று விளையாடவில்லை. பந்துவீச்சில் உமேஷ் யாதவ் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் உள்ளே வந்திருக்கிறார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பின்வருமாறு காண்போம்.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
விருத்திமான் சாஹா(கீப்பர்), அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):
என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ்(கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி