அடுத்த தலைமை பயிற்சியாளர் குறித்து கருத்து தெரிவிக்க விராட் கோலிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் 45 நாட்களுக்கு தற்போதிருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக்காலத்தை பிசிசிஐ நீட்டித்தது.
இந்த இடைப்பட்ட காலங்களில் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்து, இந்த பதவிகளுக்கு வர விரும்புவோர்கள் விண்ணப்பிக்குமாறு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. பலரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்கு கபில்தேவ் தலைமையிலான ஆலோசனை குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்களை அவர்கள் ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பர் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, “மீண்டும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும்” என கருத்து தெரிவித்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணி நிர்வாகம் அது குறித்து முடிவெடுக்கும் என கூறிவிட்டு செல்வதை விட்டுவிட்டு இவர் தான் வேண்டும் என எப்படிக் கூறலாம் என கேள்வியையும் எழுப்பினர்.
விராட் கோலிக்கு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், “அடுத்து அணியின் தலைமை பயிற்சியாளராக யார் வரவேண்டும் என அணியின் கேப்டன் கூறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அடுத்த சில ஆண்டுகளுக்கு அவருடன் அணியின் கேப்டனும் வீரர்களும் தான் பயணிக்க போகிறார்கள். அதனால் அணியும் ஒற்றுமையை கருத்தில் கொண்டு கேப்டன் தனது விருப்பத்தை நிச்சயம் தெரிவிக்கலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது” என்று பதிலடி கொடுத்துள்ளார்