2011 உலகக்கோப்பை போட்டியில் முன்னரே இறங்கிது தோனியின் முடிவுதான்: கேரி கிடிர்ஸ்டன்

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன்னரே 161 ரன் தேவைப்பட்டபோது தோனி களமிறங்கினார். இந்த முடிவு தோனியே தானாக எடுத்தார் என அப்போதைய இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி அடித்த அந்த சிக்சர் கோப்பையை இந்தியாவின் வசமாக்கியது என்றாலும் அதற்கு வந்த பாதை கடினமானது. 2007-ல் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த ராகுல் திராவிட், சவுரவ் கங்கூலி ஆகிய மூத்த வீரர்கள் 2011-ல் அணியில் இல்லை. சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அனைத்து அணிகளிலும் அதிக அனுபவம் பெற்ற ஆட்டக்காரர் அவர்.

டாஸ் வென்ற இலங்கை மட்டையாட்டத்தைத் தேர்வுசெய்தது. அணித் தலைவர் குமார சங்கக்காராவும் (48) மஹீலா ஜெயவர்த்தனேயும் (103) கௌரவமான ஸ்கோரை (274-6) எட்ட உதவினார்கள். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் ஸ்கோர் 31 ஆக இருக்கும்போது ஆட்டமிழந்தார் (18). அரங்கம் அமைதியில் உறைந்தது.

காம்பீரும் கோலியும் பதறாமல் இன்னிங்ஸை முன்னெடுத்துச் சென்றனர். ஸ்கோர் 114ஆக இருக்கும்போது கோலி வீழ்ந்தார். இன்னும் 29.2 ஓவர்களில் 161 ரன் எடுக்க வேண்டும். நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜும் ரெய்னாவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தோனி யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். கால் காப்பைக் கட்டிக்கொண்டு மட்டையுடன் களம் இறங்கினார். அனைவரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.

“அது ஒரு சூதாட்டம் என்பது எனக்குத் தெரியும்” என்று பின்னாளில் தோனி கூறினார். யுவராஜ் சிங் நல்ல ஃபார்மில் இருந்தாலும் காம்பீர் களத்தில் இருப்பதால் இடது, வலது ஜோடி ஆடினால் நன்றாக இருக்கும் என்பதும் இலங்கையின் சுழல் பந்தைத் தன்னால் மேலும் சிறப்பாக ஆட முடியும் என்பதும் தான் எடுத்த முடிவுக்குக் காரணம் என்றார் தோனி.

துணிச்சலான முடிவுக்கு ஏற்ப ஆடினார் தோனி. காம்பீர் கிட்டத்தட்ட முனிவரைப் போன்ற அமைதியுடன் ஆடினார். இருவரும் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார்கள். வெற்றியை நெருங்கும் சமயத்தில் காம்பீர் சற்றே கவனம் பிசகி ஆட்டமிழந்தாலும் (97), யுவராஜ் சிங் தோனிக்குத் துணையாகக் கடைசிவரை நின்றார்.

ஆட்டத்தைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவரான தோனி, குலசேகரா வீசிய 49-வது ஓவரின் இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் எல்லைக் கோட்டுக்கு வெளியில் அனுப்பினார். அரங்கம் அதிர்ந்தது. முகமெல்லாம் சிரிப்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியே ஓடி வந்தார். தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவராஜ் சிங் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். 28 ஆண்டுகள் கழித்து கோப்பை மீண்டும் இந்தியர்களின் கைக்கு வந்தது

Sathish Kumar:

This website uses cookies.