இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தான் தனது ரோல் மாடல் என இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் அதிக பாராட்டுக்களை பெற்ற வீரர்களில் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் மிக முக்கியமானவர்.
டிவில்லியர்ஸ், கோஹ்லி போன்ற ஜாம்பவான்களே பல போட்டிகளில் சொதப்பிய போதிலும், இளம் துவக்க வீரரான தேவ்தத் படிக்கல் பெங்களூர் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும், மிக முக்கிய பங்காற்றினார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லவர்.
சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது முதல் தொடரிலேயே வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றுள்ள படிக்கல், வெகு விரைவில் இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், படிக்கல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கவுதம் கம்பீர் தான் தனது ரோல் மாடல் என ஓபனாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து படிக்கல் பேசுகையில், ““இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓப்பனிங் விளையாடிய கவுதம் கம்பீர்தான் எனது ரோல் மாடல். அணி பிரஷரில் இருக்கும்போது அவரது ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதனால் தான் அவரை பிடிக்கும். இந்த சீசனில் என்னால் நிச்சயமாக ரன்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் விளையாடினேன்” என்றார்.