2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது நான் சதம் அடிப்பதை தோனி நினைவுபடுத்தாமல் இருந்திருந்திருந்தால் நான் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பேன் என்று எம்.எஸ்.தோனி மீது 8 ஆண்டுகளுக்குப்பின் கவுதம் கம்பீர் மறைமுகமாக பழிசுமத்தியுள்ளார்.
அதாவது தன்னிடம் சதம் குறித்து நினைவுபடுத்தியதால்தான் அவசரப்பட்டு ஆட்டமிழந்தேன். அதை தோனி கூறியிருக்காவிட்டால் சதம் அடித்திருப்பேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் இரு ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் கவுதம் கம்பீர்தான் என்பதை மறக்க முடியாது. ஆனால், என்னவோ அந்த இரு போட்டிகளிலும் கவுதம் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.
2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கம்பீர் 75 ரன்கள் சேர்த்தார். இந்திய 157 ரன்கள் சேர்த்ததில் அதில் அதிகபட்சமான ரன்கள் சேர்த்தது கம்பீர்தான். ஆனால், ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய இர்பான் பதானுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்களும், தோனி 91 ரன்களும் சேர்த்தனர். ஆனால், நடுவரிசையில் சிறப்பாக ஆடிய கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்காமல் கடைசிவரை களத்தில் நின்ற தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்து திணறியது. அப்போது 4-வது விக்கெட்டுக்கு தோனியும், கம்பீரும் சேர்ந்து 109 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
இந்த இரு முக்கிய ஆட்டங்களிலும் கவுதம் கம்பீரின் பங்களிப்பு இருந்தும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பாஜகவில் சேர்ந்து தற்போது எம்.பி.யாக உள்ளார். சமீபத்தில் ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சதத்தைத் தவறவிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கவுதம் கம்பிர் பதில்:
2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஏன் சதத்தைத் தவறவிட்டோம் என்ற இந்த கேள்வியை எனக்குள் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். 97 ரன்கள் சேர்த்திருந்தபோது எனக்கு என்ன நடந்தது, ஏன் ஆட்டமிழந்தேன் எனக் கேட்டுள்ளேன்.
நான் பலரிடமும் கூறியது என்னவென்றால், நான் 97 ரன்கள் அடித்தேன் என்ற விவரமே அப்போது களத்தில் இருந்த எனக்குத் தெரியாது. எனக்கு என்னுடைய தனிப்பட்ட ஸ்கோர் என்ன என யாரும் சொல்லவில்லை அதுபற்றி நினைக்கவும் இல்லை. என்னுடைய நோக்கம், இலக்கு அனைத்தும் இலங்கையை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஓவர் முடிந்த நிலையில், நானும், கேப்டன் தோனியும் பேசிக்கொண்டோம். அப்போது, தோனி என்னிடம் நீங்கள் இப்போது 97 ரன்கள் அடித்திருக்கிறீர்கள். சதம் அடிக்க இன்னும் 3 ரன்கள்தான் இருக்கிறது. 3 ரன்கள் அடித்தால் சதத்தை எட்டிவிடலாம் என்றார்.
கேப்டன் தோனியிடம் இருந்து இந்த வார்த்தை வரும்முன்பு வரை எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. என் தனிப்பட்ட ஸ்கோரைப் பற்றி சந்திக்கவில்லை. ஆனால், தோனி கூறியபின்புதான் என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரைச் சிந்திக்கத் தொடங்கினேன்.
உடனே என்னுடைய மனது, மூளை என்னுடைய தனிப்பட்ட ஸ்கோரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது, ரத்தத்தில் ஒரு வேகம் ஏற்பட்டு அதைப் பற்றிய ஓட்டம் என் மனதில் ஓடியது. தோனி என்னிடம் சொல்வதற்கு முன்புவரை, இலங்கையை வெல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டுமே என் கண் முன் இருந்தது. ஆனால் தோனி கூறியபின் எல்லாமே மாறிவிட்டது.
ஒருவேளை என்னிடம் தோனி சொல்லாமல் இருந்திருந்தால், எனக்கு இலங்கை அணிக்கு எதிரான இலக்கு மட்டுமே மனதில் இருந்திருந்தால், என்னால் எளிதாகச் சதம் அடித்திருக்க முடியும்.
97 ரன்கள் இருந்தபோது, இன்னும் 3 ரன்கள் தான் சதம் அடிக்க தேவை என்ற அழுத்தம், விருப்பம் எனக்குள் வேகத்தை ஏற்படுத்தியது, பதற்றத்தில் ஆட்டமிழந்தேன். அதனால்தான் எப்போதும் நாம் நிகழ்விலேயே இருக்க வேண்டும். நான் ஆட்டமிழந்து ஓய்வறைக்குச் சென்றபோது, என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த 3 ரன்கள் என் மீதமுள்ள வாழ்க்கையில் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது. இன்று கூட மக்கள் என்னிடம் 3 ரன்களை தவறவிட்டுவிட்டீர்கள் என்றுதான் கேட்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்