நியூஸிலாந்திற்கு துரோகம் செய்துள்ளது ஐசிசி – கௌதம் கம்பீர் காட்டம்

விதிமுறைகளை காரணம் காட்டி நியூசிலாந்து அணிக்கு ஐசிசி துரோகம் செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த ஞாயிறு அன்று (ஜூலை 14) நடந்து முடிந்தது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோதின. அதில் இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றிராத காரணத்தினால் யார் முதல் உலகக்கோப்பையை வெல்வார் என்ற பரபரப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இடையே பரவலாக காணப்பட்டது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தட்டுத்தடுமாறி 241 ரன்கள் அடித்தது. அதற்கு அடுத்ததாக போட்டியை நடத்தும் உள்ளூர் அணியான இங்கிலாந்து அணி களம் இறங்கியது. துவக்கத்தில் இங்கிலாந்து வீரர்களும் மிகவும் தடுமாறினர். பைர்ஸ்டாவ், ராய் மற்றும் ரூட் மூவரும் அடுத்தடுத்து வெளியேறிய பிறகு, நடுவரிசையில் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை இறுதி வரை எடுத்துச் சென்றனர்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அம்பயர்களின் தவறான முடிவு மற்றும் இரண்டு ரன் அவுட் என பரபரப்பாக சமனில் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்டது. சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் என எடுத்து சமநிலை பெற்றபோது, பவுண்டரிகள் அடிப்படையில் பார்க்கையில், இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகளும் நியூசிலாந்து அணி 17 பவுண்டறிகளும் அடித்திருந்தனர். இறுதியில், அதிக பவுண்டரிகள் அடித்திருந்த இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது

இது குறித்து பல கிரிக்கெட் வல்லுனர்களும் விமர்சகர்களும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். ஐசிசி விதிமுறைகள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளையும் முன் நிறுத்தினர்.

இதற்கிடையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறுகையில், “ஐசிசி விதிமுறைகள் மிகவும் அபத்தமானது. தவறுகளை களைந்து உடனடியாக மாற்றம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு ஐசிசி துரோகமிழைத்துள்ளது. இதை வரலாறு ஒரு போதும் மறக்காது. இனிவரும் காலங்களில் சரியான விதிமுறைகளை கையாள்வதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று எனது தரப்பில் கோரிக்கை விடுத்து கொள்கிறேன் என்றார்”

Prabhu Soundar:

This website uses cookies.