பரிந்துரை செய்தவர் பரிதாபம்: அணியில் இருந்து ‘கம்பீரை ஓரம்கட்டிய ஸ்ரேயாஸ் அய்யர்’ ?: டெல்லி அதிரடி தொடக்கம்

டெல்லியில் நடந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியின் இருந்து கவுதம் கம்பீர் கழற்றிவிடப்பட்டுள்ளார்.

கடந்த 6 போட்டிகளில் 5 தோல்விகள் அடைந்ததால், கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கம்பீர், ஸ்ரேயாஸ் அய்யருக்கு அந்த பதவியை தந்தார். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் சீசன் முழுவதும் தனது ஊதியமான ரூ.2.80 கோடியை பெறப்போவதில்லை எனவும் அறிவித்தார்.

ஆனால், கேப்டன் பதவி ஏற்ற ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே பதவி கொடுத்த கம்பீரை அணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளார். இது அப்படித்தானா அல்லது கம்பீர் தன்னை விலக்கிக் கொண்டாரா என்பது தெரியவில்லை

போட்டி தொடங்கும் முன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கம்பீர் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டார், ஐபிஎல் சாம்பியனான கம்பீர், அவரின் வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. கேப்டன் பொறுப்பு கிடைத்ததில் இருந்து பொறுப்பும், வெற்றி பெற வேண்டும் என்ற சிறிய அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறும் 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் வெற்றி பெறவேண்டும் என்று பெருமையாக கூறிய ஸ்ரேயாஸ் கடைசியில் கம்பீரை நீக்கி இருக்கிறார்.

கடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் கம்பீர், இந்த போட்டியிலும் இறங்கினாலும் சொதப்பிவிடுவார் என்று ஓரம்கட்டப்பட்டாரா அல்லது, தொடர்ந்து அடுத்த சில போட்டிகளுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்து இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், கம்பீர் இல்லாததால் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான பிரிதிவ் ஷாவும், முன்ரோவும் இறங்கி வெளுத்துவிட்டார்கள். முதல்விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து முன்ரோ 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரிவித்ஷா அரைசதம் அடித்து 62 ரன்களில் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்குடெல்லி அணி 129 ரன்கள் சேர்த்துள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களுடனும் மேக்ஸ்வெல் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Editor:

This website uses cookies.