2018-ம் ஆண்டு 11-வது ஐபிஎல் சீசன் ஏலத்தில் முதல்நாளில் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ் கெயிலை, 2-ம் நாளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. தனக்கு கிடைத்த இருபோட்டிகளை அருமையாக பயன்படுத்திய கெயில் அரைசதம், சதம் அடித்து தனது இருப்பை உறுதிசெய்துள்ளார்.
சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 15 ரன்கள் வித்திசாயசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணி. இதில் கிங்ஸ் லெவன் அணி வீரர் கிறிஸ் கெயில் தனது காட்டடி பேட்டிங் மூலம் 63 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்தார். இதில் 11 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடங்கும்.
அதிகமான சிக்ஸர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று கிறிஸ் கெயில் 11 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் 102 ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் 280 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெயில் 863 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
கெயில் : கோப்புப்படம்
அதாவது டி20 போட்டிகளில் கெயில் சந்திக்கும் ஒவ்வொரு 8 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் அடித்து வருகிறார் என்பது புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரிகிறது. அடுத்தபடியாக டீவில்லியர்ஸ் தான் சந்திக்கும் ஒவ்வொரு 14 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர்களில் கெயிலுக்குஅடுத்த இடத்தில் ரோகித் சர்மா 158 போட்டிகளில் 179 சிக்ஸர்கள் அடித்து 2-ம் இடத்தில் உள்ளார். ரெய்னா 159 போட்டிகளில் 174 சிக்ஸர்கள் அடித்து 3-ம் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி 145 போட்டிகளில் 167 சிக்ஸர்களும், டீவில்லியர்ஸ் 122 போட்டிகளில் 166 சிக்ஸர்களும் அடித்து 5-ம் இடத்திலும் உள்ளனர். 146 போட்டிகளில் விளையாடிய தோனி 162 சிக்ஸர்களும், 114போட்டிகளில் வார்னர் 160 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கெயிலுக்கு அடுத்த இடத்தில் பொலார்ட் 523 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் சர்வதேச அளவில் நமீபியா அணிக்கு எதிராக நார்த்வெஸ்ட் வீரர் நிக்கி வான் டென் பெர்க் 12 சிக்ஸர்கள், ஒர பவுண்டரி உள்ளிட்ட 101 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும்.
அதற்கு அடுத்ததாக, சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் ரஸல் 11 சிக்ஸர்களும், கெயில் அடித்த 11 சிக்ஸர்களும் இடம் பெறுகின்றன.
21-வது சதம்
கிறிஸ் கெயிலைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் டி20 போட்டிகளில் அடித்த 21-வது சதமாகும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கெயில் அடிக்கும் 6-வது சதமாகும்.
மேலும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் கெயில் 6 சதங்களும் கரிபியன் ப்ரிமியர் லீக்கில் 3 சதங்களும், அடித்துள்ளார். இதுபோல டி20 உலகக்கோப்பையில் 2 சதங்கள், ராம்ஸ்லாம் டி20, நாட்வெஸ்ட் டி20, ஸ்டான்பிக் பேங்க் டி20, பிக்பாஷ் லீக் ஆகியவற்றிலும் தலா ஒருசதம் கெயில் அடித்துள்ளார்.
மேலும், ஐபில் போட்டிகளில் கெயில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். அதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று 5 சதங்களும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று ஒருசதமும் அடித்துள்ளார். இதில் பெங்களூரு அணியில் இடம் பெற்று கெயில் அடித்த இருசதங்கள் கிங்ஸ்லெவன் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 102 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 23 அரைசதங்கள், 6சதங்கள் உள்பட 3,873 ரன்கள் குவித்துள்ளார்.
சில சுவையான தகவல்கள்
1. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கெயில் 104 ரன்கள் சேர்த்ததே அந்த அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட தனிஒருவீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்த 2015-ல் மெக்குலம் 100 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
2. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கெயில் அடித்த சதம், இதற்கு முன் அடிக்கப்பட்ட சதங்களில் மிக மெதுவான, அதிகபந்துகளில் எடுக்கப்பட்ட சதமாகும்.
3. சன்ரைசர்ஸ் வீரர் ராஷித் கான் ஓவரில் கெயில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்தார். இதுதான் ராஷித் கான் 55ரன்கள் கொடுத்தார். இதுதான் அவரின் பந்துவீச்சில் மிகமோசமானதாகும். இதற்கு முன் 2015ம் ஆண்டுபுலவாயோ நகரில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித்கான் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
4. ரஷித் கான் பந்துவீச்சில் மட்டும் நேற்று கெயில் 6 சிக்ஸர்கள் அடித்தார். இதற்கு முன் இதேபோல ஒருவர் ஓவரில் அதிகபட்ச சிக்ஸர் அடித்தவர்களாக விராட் கோலி, ரஸல் ஆகியோர் வரிசையில் கெயில் இடம் பெற்றார். மேலும், அதிகமான சிக்ஸர் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களாக கே.சி.கரியப்பா, டிவைன் பிராவோ, முகம்மது ஷமி ஆகியோர் வரிசையில் ராஷித் கான் இடம் பெற்றார்.
5. தொடரந்து 4 சிக்ஸர்களை இதுவரை 6 பேட்ஸ்மேன்கள் அடித்துள்ளனர். அதில் கெயில் மட்டும் 2 முறை அடித்துள்ளார்.