அணியின் முன்னாள் கேப்டனுக்கு தேர்வுக்குழுவில் புதிய பதவி கொடுத்து கௌரவித்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டனாக சில மாதங்கள் செயல்பட்டவர் அதிரடி வீரர் ஜார்ஜ் பெய்லி. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்.
சமீப காலமாக இவரது பார்ம் சரிவர அமையவில்லை. சில மாதம் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்தார். இதனால், கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்று வருவதால் இனி இவரால் அணியில் இடம்பிடிக்க சாத்திய கூறுகள் இல்லை என தெரிகிறது.
இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் தேர்வுக்குழு உறுப்பினராக ஜார்ஜ் பெய்லி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டார செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஜார்ஜ் பெய்லி பிக் பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளயைாடி வருகிறார். அதேபோல் டாஸ்மானியா அணிக்காகவும் விளையாடி வருகிறார். தேர்வுக்குழுவில் இடம் பிடித்தாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போவதில்லை.
அதேபோல தற்போது ஓய்வுபெறும் எண்ணமும் இல்லை என ஜார்ஜ் பெய்லி தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா தேர்வுக்குழுவின் சேர்மனாக டிரெவோர் ஹோன்ஸ் இருந்து வருகிறார். தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இதில் உறுப்பினராக இருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளிலும் ஆடுவதற்கு ஆர்வமாக இருப்பதாக ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியிருக்கிறார்.