மூன்றாம் நாள் முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்து வலுவான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. களத்தில் விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் நிற்கின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடுத்து வலுவான ஸ்கோரை முன் வைத்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஏனெனில் அதிரடியான அணுகுமுறையுடன் இவர் ஆரம்பித்தார். மேலும் இவர் அவுட் ஆன பந்து விக்கெட் எடுப்பதற்கான பந்தும் இல்லை.
அடுத்து உள்ளே வந்த புஜாரா சுப்மன் கில்லுடன் சேர்ந்து நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர் ஒரு முனையில் நங்கூரம் போல நின்று கொண்டார். மறுமுனையில் கில் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தபோது, புஜாரா 42 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி, புஜாராவை போல ஒரு முனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த கில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை 194 பந்துகளில் பூர்த்தி செய்தார். இந்த ஆண்டு இவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும்.
சுப்மன் கில் 128 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கில் சென்ற பிறகு உள்ளே வந்த ஜடேஜா, விராட் கோலி உடன் சேர்ந்து நாள் முடியும் வரை கிரிக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இந்த ஜோடியின் விக்கெட்டை எடுப்பதற்கு நாளின் கடைசி ஓவர் வரை கடுமையாக முயற்சி செய்த ஆஸ்திரேலிய அணிக்கு எந்த விதத்திலும் பலன் கிடைக்கவில்லை.
மூன்றாம் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிதற்கு 289 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி. தற்போது வரை 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. களத்தில் அரைசதம் கடந்து 59 ரன்களுடன் இருக்கிறார் விராட் கோலி. இவருக்கு பக்கபலமாக ஆடிவந்த ஜடேஜா 16 ரன்களுடன் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.