ஒரே ஆண்டில் மூன்றுவித போட்டிகளிலும் சதம் அடித்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சுப்மன் கில்.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தற்போது ஆடி வருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிசில் 480 ரன்கள் அடித்தது.
பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா 35 ரன்களுக்கும், புஜாரா 42 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். ஆனால் மறுமுனையில் அபரமாக விளையாடி வந்த துவக்க வீரர் சுப்மன் கில் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
2023 ஆம் ஆண்டு சுப்மன் கில் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்தார்.
அதே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது முதல் டி20 சதத்தையும் அடித்தார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்திருக்கிறார்.
ஓராண்டில் ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமிதத்துடன், சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.
ஓராண்டில் மூன்றுவித போட்டிகளிலும் சதமடித்த இந்தியர்கள்:
2010 – சுரேஷ் ரெய்னா
2016 – கே எல் ராகுல்
2017 – ரோகித் சர்மா
2023 – சுப்மன் கில்
4வது டெஸ்டில் இதுவரை..
நான்காவது டெஸ்ட் போட்டியை பார்க்கையில், இந்திய அணி பேட்டிங்கில் நன்றாகவே பதிலடி கொடுத்து வருகிறது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில் 128 ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறார்.
தற்போது விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். இந்திய அணி 250 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் பின்தங்கியுள்ளது.