ஐபிஎல் பைனலில் ஜடேஜாவிற்கு முன்னர் தோனி களமிறங்கியதற்கு காரணம் இதுதான்! டக் அவுட் ஆனதும் அவர் பேசியது இதுதான்! என்று மனம் திறந்து பேசி உள்ளார் காசி விஸ்வநாதன்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக சென்ற குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான பைனல் போட்டி, சிஎஸ்கே அணிக்கு சாதகமாக முடிந்து திரில் வெற்றியும் பெற்றது.
முன்னதாக மழை காரணமாக போட்டி நடக்குமா? இல்லையா? என்பதே புரியாமல் இருந்தது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தி முடிக்கப்பட்டது.
சிஎஸ்கே அணி, கடைசி 20 பந்துகளில் கிட்டத்தட்ட 50 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ராயுடு அதிரடியாக விளையாடி கடைசியில் 14 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து அவுட்டானார்.
வழக்கமாக ஜடேஜா முன்னர் களமிறங்குவார். அதன் பிறகு தோனி உள்ளே வருவார். ஆனால் பைனலில் தோனி ஜடேஜாவிற்கு முன்னர் களமிறங்கினார். வந்த முதல் பந்திலேயை ஆட்டம் இழந்து அதிர்ச்சியையும் கொடுத்தார். அதன் பிறகு சிஎஸ்கே அணியின் பக்கம் அழுத்தம் திரும்பியது. இறுதியாக கடைசி இரண்டு பந்துகளில் 10 அடிக்க வேண்டிய நிலை இருந்தபோது, ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஜடேஜா பினிஷ் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் பைனலில் ஜடேஜாவிற்கு முன்னர் தோனி ஏன் களம் இறங்கினார்? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் பேசினார். அவர் கூறியதாவது:
“கடைசியில் 14 பந்துகளுக்கு 21 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது தோனி உள்ளே களம் இறங்கினார். தோனி எப்பேற்பட்ட பினிஷர் என்பது உலகறியும். ஆகையால் நாமே பிரஷர் எடுத்துக்கொண்டு பினிஷ் செய்யலாம் என்று நினைத்து இறங்கிய அவர், முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தது பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும். அணிக்காக தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லை என்கிற வருத்தத்தில் அவர் கண்ணீர் விட்டிருக்கலாம். ஏனெனில் கடைசியில் ஜடேஜாவின் பக்கம் மொத்த அழுத்தமும் திரும்பியது.
ஒருவேளை ஜடேஜா பினிஷ் செய்ய முடியவில்லை என்றால் என்னவாகும் என அவர் நினைத்திருக்கலாம். தோனியை பற்றி நன்கு உணர்ந்தவனாக இதைச் சொல்கிறேன். இதனால் தான் அவர் கண்ணீர் விட்டிருக்கக்கூடும்.” என்றார்.