54 பந்துகளில் 122 ரன்கள்; பொளந்துகட்டிய கிறிஸ் கெய்ல்
மே.இ.தீவுகள் அணியின் டி20 புலி கிறிஸ் கெய்ல் கனடா குளோபல் டி20 லீக் போட்டியில் தன் பேட்டிங் மூலம் சிக்சர் அதிரடி திருவிழா நடத்தினார். வான்கூவர் நைட்ஸ் அணிக்காக அவர் 54 பந்துகளில் 122 ரன்களை விளாசித்தள்ளினார்.
கிறிஸ் கெய்ல் 12 சிக்சர்கள் 7 பவுண்டரிகளை இதில் விளாசித்தள்ள டி20 வரலாற்றில் வான்கூவர் நைட்ஸ் 2வது அதிகபட்ச ஸ்கோரான 276/3 என்ற நிலையை எட்டி சாதனை புரிந்துள்ளது.
பிராம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
கிறிஸ் கெய்ல் முதலில் தொடக்க வீரர் தோபியாஸ் வெஸ்ஸுடன் இணைந்து 63 ரன்கள் கூட்டணி அமைத்தார். சக மே.இ.தீவுகள் வீரர் சாத்விக் வால்டனுடன் 67 ரன்கள் கூட்டணி அமைத்தார், பிறகு தென் ஆப்பிரிக்காவின் நவீன நட்சத்திர வீரரான ரஸீ வான் டெர் டியூசனுடன் இணைந்து 8.5 ஒவர்களில் 139 ரன்கள் கூட்டணி அமைத்து விளாசித்தள்ளினர்.
தொடக்க வீரர் வெஸ் 19 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்களையும் வான் டெர் டியூசன் 25 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும் விளாசினர்.
இலக்கை மாண்ட்ரீல் டைகர்ஸ் விரட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை ஏனெனில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட கடும் இடி மின்னல் கனமழை அச்சுறுத்தல் காரணமாக அமைந்தது.
இந்த கெய்ல் இன்னிங்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரல் வீடியோவாக பரவி வருகிறது.