2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை விளையாடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று பேட்டியளித்திருக்கிறார் ஆல்ரவுண்டர் பென்ஸ் டோக்ஸ்.
இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வளம் வருகிறார். 2019ல் 50 ஓவர் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு பென் ஸ்டொக்ஸ் மிக முக்கிய காரணமாக இருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியிலும் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து வெற்றியை பெற்றுத்தந்ததால் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
பென் ஸ்டோக்ஸ் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடந்த ஜூலை மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். வெறும் 31 வயதே ஆன இவர், இதுவரை 105 ஒரு நாள் போட்டிகளில் 2011 ஆம் ஆண்டில் இருந்து விளையாடியுள்ளார்.
2924 ரன்கள் அடித்துள்ள ஸ்டோக்ஸ், 38.98 சராசரியாக வைத்திருக்கிறார். இதில் 21 அரைசதங்கள் அடங்கும். பவுலிங்கில் 71 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இப்படிப்பட்ட ஆல்ரவுண்டர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது அணி நிர்வாகம் உட்பட பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் மீண்டும் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவது பற்றி பேசியுள்ளார் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். அவர் கூறியதாவது: “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் என்னை துபாயில் சந்தித்து பேசுவதற்கு அழைத்தார். நான் பேசுவதற்கு சென்றபோது, 50 ஓவர் உலகக் கோப்பை என ஆரம்பித்தார். உடனடியாக அந்த இடத்தை விட்டு நான் கிளம்புகிறேன் என கூறிவிட்டு நகர்ந்து விட்டேன்.
அப்போது எனது முழு கவனமும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை பற்றியே இருந்தது. யாருக்கு தெரியும் இன்னும் சில மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது என்னை கேட்டால் எனக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட விருப்பமில்லை என்று மட்டுமே கூறுவேன். ஆனால் போகப் போக நான் எப்படி யோசிப்பேன் உலக கோப்பையை பற்றி என்ன நினைப்பேன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும். மேலும் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களாக இருக்கும். வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை.” என்றார்.