பாண்டியா அணியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் விராட் கோலி!! நியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றதையடுத்து விராட் கோலி அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். அதோடு அணிக்குள் வரும் புதிய திறமைகளையும் விதந்தோதினார்.
விராட் கோலி கூறியதாவது:
சில தனித்துவமான திறமை படைத்த வீரர்கள் வந்துள்ளனர், பிரித்வி ஷா தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பற்றிக் கொண்டார். ஷுப்மன் கில் இன்னொரு உற்சாகமூட்டும் திறமையுடைய வீரர்.
நான் அவர் வலைப்பயிற்சியில் ஆடியதைப் பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது, நாம் கூட 19 வயதில் இப்படி ஆடவில்லையே என்று நினைக்க வைத்தது. இத்தகைய தன்னம்பிக்கையைத்தான் அவர்கள் சுமந்திருக்கின்றனர், தர நிலை உயர உயர அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. இத்தகைய திறமைகள் நேரடியாக அணிக்குள் வந்து உடனடியாக நிரூபிக்கவும் செய்கின்றனர். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மகிழ்ச்சியை விடவும் நிறைவடைகிறோம். அவர்கள் வளர்ச்சியடைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.
இந்த 3 போட்டிகளுமே துல்லிய ஆட்டமாக தொடர் வெற்றியில் முடிந்தது அபாரமானது. ஓயாது சிறப்பான ஆட்டத்தை அணி வீரர்கள் வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் போட்டியுடன் எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் கடுமையான தொடர், பிறகு இங்கு போட்டிகள். இப்போது 3-0 என்று தொடரை வென்றுள்ளோம் அதனால் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடிகிறது.
அதே வேளையில் இலக்கை விரட்டும் போது 300-320 ரன்கள் அல்லது அதற்கும் மேலான இலக்கை விரட்டும்போது 33-35 ஓவர்கலில் 200-220 ரன்களை எட்டிவிட்டால் தோனி, தினேஷ் கார்த்திக், ராயுடு அல்லது கேதார் ஜாதவ், பாண்டியா உள்ளனர், ஆனால் முதல் 3 வீரர்கள் சரியாக ஆடாமல் 50/3 என்று 12 ஒவர்களில் காலியானால் 4ம் நிலை வீரர் ஒருவர் சதம் பெரிய சதம் அடித்து 320-325 இலக்கை விரட்டும்படி இருக்க வேண்டும். இந்நிலையில் 4ம் நிலை வீரர் யார் என்ற விவாதத்தை மீண்டும் தொடங்கிய விராட் கோலி இன்று கூறியதாவது:
“கடந்த 5 போட்டிகள்… இங்கு 3 ஆஸ்திரேலியாவில் 2 போட்டிகளைப் பார்த்தோமானால் 4ம் நிலை வீரரைத்தான் திடப்படுத்த வேண்டியுள்ளது. ராயுடு நன்றாக ஆடும்போது அவர்தான் சரி என்று நம்பிக்கை வருகிறது. தினேஷ் கார்த்திக்கும் பெரிய பார்மில் இருக்கிறார், தேவைப்பட்டால் அவரையும் 4ம் நிலைக்கு உயர்த்தலாம். அதாவது மிடில் ஆர்டரை மாற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தினேஷ் ஒரு தெரிவாக உள்ளார். எம்.எஸ். தோனி பந்தை நன்றாக அடித்து வருகிறார். ஆகவே அனைவருமே நல்ல நிலையில் இருப்பதால் இந்த 3 போட்டிகளிலும் பார்க்கும்போதும் 4ம் நிலை பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறோம்.
இலக்கை விரட்டும்போது பெரிய இலக்காக இருந்தால் எப்படியும் இலக்கை நோக்கித்தான் பேட்டிங் இருக்கும். ஆனால் முதலில் பேட் செய்யும் போது என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பது நமக்கு தெரியாது. அது களத்தில் அந்தச் சமயத்தில் ஆடுபவர்கள் நிர்ணயிப்பது
இவ்வாறு கூறினார் விராட் கோலி.