இங்கிலாந்து தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 544 ரன்கள் எடுத்து அவர் மீது சந்தேகங்களையும் கடந்து சென்று அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் சென்று விட்டார் இந்திய கேப்டன் விராட் கோலி என்று இந்திய முன்னாள் பயிற்சியாளரும் ஆஸி.முன்னாள் கேப்டனுமான கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
பொதுவாக கிரெக் சாப்பலும் சரி இயன் சாப்பலும் சரி விமர்சனம் செய்வதில் கைதேர்ந்தவர்கள், அந்த விமர்சனத்தில் சாராம்சம் இருக்கும், அவர்கள் சுட்டிக்காட்டும் தவறை சரி செய்து கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டில் பெரிய அளவுக்கு முன்னேறியுள்ளனர். சேவாகையே கிரெக் சாப்பல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளை எப்படி புல் ஷாட் ஆடி ஸ்லிப்புகளைக்கலைக்க வேண்டும் என்று பயிற்சியளித்து மாற்ற முயற்சி செய்தார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து அவர் ஒரு அரிய பாராட்டுப் பத்திரம் படித்துள்ளார்:
“மிகப்பெரிய உடற்திறமையுடன் மனவளமும் கோலியின் மிகப்பெரிய பலமாகும். உணர்ச்சித்திறமும் அபாரம், அதாவது கடுமையான சூழலிலும் எப்படி வெற்றி பெறுவது என்பதைக் கையாளும் உணர்ச்சித்திறம் உள்ளது. விராட் போன்று வெற்றியை ருசிக்கத் தயாராக இருக்கும் அதை நோக்கி உறுதியெடுக்கும் இன்னொரு வீரரை என்னால் கூற முடியவில்லை. அவரிடம் உண்மையான அவா உள்ளது.
பலரால் முடியாததைச் சாதித்துச் செல்வதற்கு ஏதோ ஒன்று அவரை உந்துகிறது. இன்னும் அவரது சிறப்பான ஆட்டத்தை நாம் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. அதாவது இன்னும் உச்சத்துக்கு அவர் செல்லக்கூடிய உந்துதல் பெற்றவர்.
நடப்பு இங்கிலாந்து தொடரில் அவர் ஆடிய விதம் தனிச்சிறப்பானது, ஒப்புமைக்கு அப்பாற்பட்டது. நிறைய பேர் இங்கிலாந்தில் அவரால் முடியாது என்று சந்தேகித்தனர். அவரும் கூட இதனைச் சந்தேகிக்கவில்லை என்று நான் ஊகிக்கிறேன் அல்லது அவர்கள் கூற்றை கோலி சந்தேகித்திருக்கிறார், அதனால் அவர்கள் எண்ணங்களை உடைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.
ட்ரெண்ட் பிரிட்ஜில் கோலி, ரஹானே இடையே ஏற்பட்ட கூட்டணி மிகவும் அபாரமானது, அதுவும் 3 விக்கெட்டுகள் விழுந்த பிறகு மிகவும் தனிச்சிறப்பான ஆட்டம். எல்லாருடைய எதிர்பார்ப்பையும் கடந்து சென்று விட்டார் கோலி என்றே கருதுகிறேன்” என்று கூறியுள்ளார் கிரெக் சாப்பல்