லைன், லென்த் பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படாமல் முடிந்தவரை வேகமாக பந்துவீச வேண்டும் என உம்ரன் மாலிக்கிற்கு, முன்னாள் வீரரும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டேல் ஸ்டைன் அறிவுறுத்தியுள்ளார்.
15வது ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிசேக் சர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களையும், உம்ரன் மாலிக் தனது அசுரவேக பந்துவீச்சால் அடுத்தடுத்து வெளியேற்றி சாதனை படைத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறியதாலும், கடைசி நேரத்தில் ரசீத் கான் மற்றும் ராகுல் திவாட்டியாவின் மிரட்டல் பேட்டிங்காலும், குஜராத் அணி இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஹைதராபாத் அணியின் உம்ரன் மாலிக்கே கிரிக்கெட் வட்டாரத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்காக திகழ்ந்து வருகிறார். தனது அசுரவேக பந்துவீச்சால் எதிரணிகளை திணறடித்து வரும் உம்ரன் மாலிக்கை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர்.
அந்தவகையில், உம்ரன் மாலிக் குறித்து பேசியுள்ள கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான க்ரேம் ஸ்வான், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான டேல் ஸ்டைனே, உம்ரன் மாலிக்கின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் சுழல் ஜாம்பவான் க்ரேம் ஸ்வான், ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்க்காத விஷயத்தை செய்து மிரட்டுகிறார் உம்ரான் மாலிக். ஃப்ரெஷ் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக், மிரட்டலான வேகத்தில் பந்துவீசுகிறார். ஸ்டெய்ன் அவரிடம், லைன் & லெந்த்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் உன்னால் எவ்வளவு வேகமாக வீசமுடியுமோ அவ்வளவு வேகமாக வீசு என்று ஸ்டெய்ன் கூறிவிட்டார். அதுதான் சரியும் கூட. நல்ல கண்ட்ரோலை வைத்துள்ள உம்ரான் மாலிக், நல்ல ஏரியாக்களில் அருமையாக வீசுகிறார் என்று ஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.