228 ரன்களை சேஸ் செய்த லக்னோ அணி 171 ரன்கள் மட்டுமே அடித்ததால், குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் வலுவாக முதலிடத்தில் இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட்டத்தை துவங்கினர்.
கில் நிதானம் காட்ட, சஹா பவர்-பிளே ஓவர்களில் வெளுத்து வாங்கினார். அதன் பிறக்கும் நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்த சஹா, 43 பந்துகளில் 81 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டிற்கு கில் மற்றும் சஹா ஜோடி 142 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தது.
அடுத்து உள்ளே வந்த ஹார்திக் பாண்டியா 15 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய கில், ஏழு சிக்ஸர்கள் விளாசி 51 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார். மில்லர் 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 227 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு டி காக் மற்றும் மேயர்ஸ் இருவரும் மிகச்சிறந்த துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 48 ரன்களுக்கு அவுட் ஆனார். தீபக் ஹூடா 11 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
மிகப்பெரிய இலக்கை துரத்துகையில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஷ் மற்றும் நிக்கோலஸ் பூரான் இருவரும் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றினர். இதனால் லக்னோ அணியின் நம்பிக்கை தடுமாற்றம் கண்டது.
மற்றொரு பக்கம் போராடி வந்த டி காக் 41 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து உள்ளே வந்து ஆயுஸ் பதோனி தனது பங்கிற்கு நேரடியாக 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க இலக்கும் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.
20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி. 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. கடைசியில் வந்து அபாரமாக பந்துவீசிய மோகித் சர்மா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் வலுவாக இருக்கிறது குஜராத்.