முதல் 10 ஓவரிலேயே வரிசையாக விக்கெட்டை கொடுத்து தடுமாறிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளுக்கு 56 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் 22 பந்துகளுக்கு 46 ரன்கள் அடித்தார். அபிநவ் மனோகர் 21 பந்துகளுக்கு 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதுதான் குஜராத் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் குஜராத் அணி 200 ரன்கள் கடக்க முடிந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்தது.
இந்த இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா(2) மற்றும் இஷான் கிஷன்(13) இருவரும் ஆரம்பத்திலேயே தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பொறுத்து விளையாடி வந்த கேமரூன் கிரீன் 26 பந்துகளுக்கு 33 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
சூரியகுமார் யாதவ் 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த போது பந்துவீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றம் கொண்டது.
மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, உள்ளே வந்த நேஹல் வதேரா சிக்சர் மற்றும் கவுண்டர்களாக விளாசி 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 150ஐ கடக்க முடிந்தது.
பியூஸ் சாவ்லா 18 ரன்கள், அர்ஜுன் டெண்டுல்கர் 13 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
நூர் அஹமது முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோகித் சர்மா கடைசியில் வந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.