மூதாட்டியுடன் செல்பீ எடுத்த பாக்., வீரர்; தனியாக படுக்கவைத்த இங்கிலாந்து வாரியம்!
விதிமுறைகளை மீறி ரசிகை ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பாகிஸ்தான் வீரரை தனிமைபடுத்தி உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சவுத்தாம்ப்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவரும் தனித்தனி ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் சவுத்தாம்ப்டன் மைதானத்திற்கு அருகே இருக்கும் கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் அணியை சேர்ந்த மூத்த வீரர் முகமது ஹபீஸ், 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மூதாட்டி இந்தப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிந்து கொண்டது. கொரோனா காலத்தில் வீரர்கள் யாரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது என விதிமுறை இருந்தது. இதை மீறியதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முகமது ஹபீஸை தனிமைப்படுத்தி இருக்கிறது.
தற்போது அவர் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தப்பட்ட பரிசோதனையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய மசூத் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். தற்போது 45 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறது.